150. அருள்மிகு தியாகராஜ சுவாமி கோயில்
இறைவன் வன்மீகநாதர், தியாகராஜ சுவாமி
இறைவி கமலாம்பிகை, நீலோற்பலாம்பாள்
தீர்த்தம் கமலாலயம்
தல விருட்சம் பாதிரி மரம்
பதிகம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
தல இருப்பிடம் திருவாரூர், தமிழ்நாடு
வழிகாட்டி நாகப்பட்டினத்திலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ளது.
தலச்சிறப்பு

Thiruvarur Gopuramமகாவிஷ்ணு சிவபெருமானின் தரிசனம் பெற இத்தலத்திற்கு வந்து தவம் செய்தார். அப்போது அவருக்கு சிவபெருமான் புற்றிலிருந்து தரிசனம் கொடுத்ததால் இத்தலத்து மூலவர் புற்றிடங்கொண்டார் என்றும், வன்மீக நாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.

மூலவர் 'வன்மீகநாதர்' என்னும் திருநாமத்துடன், சதுர வடிவ ஆவுடையுடன், லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். புற்று வடிவ சுவாமி என்பதால் அவர் மீது கவசம் சாத்தப்பட்டுள்ளது. அம்பாள் 'கமலாம்பிகை', 'அல்லியங்கோதையம்மை' என்னும் திருநாமங்களுடன் அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகின்றாள்.

திருமூலட்டானம் என்று சிதம்பரத்தைக் கூறுவது போல், இத்தலத்தையும் கூறுவர். தில்லையினும் முற்பட்டது இத்தலம் என்றும் கூறுவர்.

பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தேவசேனை சமேத சுப்ரமண்யர், நடராஜர், மகாலட்சுமி, அறுபத்து மூவர், பைரவர், சூரியன், நவக்கிரகங்கள் உள்ளிட்ட 100க்கு அதிகமான சன்னதிகள் உள்ளன.

Thiruvarur Amman Thiruvarur Thiyagarajarஅசுரர்களுடனான போரில் தேவர்கள் வெற்றி பெற முசுகுந்த சக்கரவர்த்தி உதவியதால், அவர் கேட்டபடி, இந்திரன் ஏழு ஆத்ம லிங்கங்களைக் கொடுத்தார். இந்த லிங்கங்களை முசுகுந்த சக்கரவர்த்தி ஏழு தலங்களில் பிரதிஷ்டை செய்தார். அவை 'சப்த விடங்கத் தலங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. அதில் முதன்மையானது இத்தலம். இங்குள்ள தியாகராஜரைத் தான் மகாவிஷ்ணு தம் இதயத்தில் வைத்து வழிபட்டார். இத்தலம் வீதிவிடங்கத் தலம். இங்கு ஆடிய நடனம் அஜபா நடனம். அதாவது மூச்சுக் காற்றை இழுத்து விடுதல் போல ஆடுவது இந்நடனம். நாகப்பட்டினம், திருக்கோளிலி, திருக்காறாயில், திருவாய்மூர், திருமறைக்காடு, திருநள்ளாறு ஆகியவை மற்ற சப்தவிடங்கத் தலங்களாகும்.

அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் இத்தலமும் ஒன்று. இது கமலை பீடம் என்று வழங்கப்படுகிறது.

திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியை மையமாகக் கொண்டு பரிவார சன்னதிகளாக திருவாரூர் சோமாஸ்கந்தர் சன்னதியாகவும், திருவலஞ்சுழி விநாயகர் சன்னதியாகவும், ஆலங்குடி தட்சிணாமூர்த்தி சன்னதியாகவும், சுவாமிமலை சுப்பிரமண்யர் சன்னதியாகவும், திருவாவடுதுறை நந்தி தேவர் சன்னதியாகவும், திருச்சேய்ஞலூர் சண்டிகேஸ்வரர் சன்னதியாகவும், சூரியனார் கோயில் நவக்கிரகங்கள் சன்னதியாகவும், சீர்காழி பைரவர் சன்னதியாகவும் வழங்கப்படுகிறது.

Thiruvarur Sundararசுந்தரருக்காக பரவையாரிடம் இறைவன் தூது சென்று திருமணம் நடைபெற்ற தலம். இக்கோயிலில் உள்ள தேவாசிரியன் மண்டபத்தில் அமர்ந்திருந்த அடியார்களை சுந்தரர் பாராமல் சென்றதால் கோபம் கொண்ட விறன்மிண்ட நாயனாருக்காக வருந்தி, திருத்தொண்டத் தொகை பாடிய தலம். திருமுதுகுன்றத்தில் (விருத்தாசலம்) தாம் பெற்ற பொன்னை மணிமுத்தாற்றில் போட்டு இங்குள்ள கமலாயத்தில் சுந்தரர் எடுத்த தலம். அந்த பொன்னின் தரத்தில் சந்தேகம் எழ, குளக்கரையில் இருந்த விநாயகர் தங்கத்தை உரைத்துப் பார்த்து சொன்னதால், அவர் 'மாற்றுரைத்த விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார்.

நமிநந்தியடிகள் இக்கோயிலின் இரண்டாம் (தெற்கு) பிரகாரத்தில் இருக்கும் மற்றொரு தேவாரப் பாடல் பெற்ற தலமான ஆரூர் அரநெறி கோயிலில் உள்ள அசலேஸ்வரருக்கு தீபம் ஏற்றி வழிபட்டு முக்தி அடைந்தார்.

Thiruvarur Kamalalayamகண் பார்வை அற்ற தண்டியடிகள் நாயனார் கமலாலயத்தைத் தூர் வார முயற்சி செய்யும்போது சமணர்கள் ஏளனம் செய்ய, இறைவன் கருணையால் அவர்களுக்கு பார்வை பறிபோய், தண்டியடிகள் பார்வை பெற்றார்.

சோழ மன்னர்கள் முடிசூட்டு விழாக் கொண்டாடிய முக்கிய நகரங்களுள் திருவாரூரும் ஒன்று. மனுநீதிச் சோழன் ஆட்சி புரிந்து, ஒரு கன்றுக்காக தம் மகனை தேர்க்காலில் இட்டு நீதியை நிலைநாட்டிய தலம். திருமுறைகளை தொகுக்க உதவிய அநபாயச் சோழனும், அபயகுல சேகர சோழனும் ஆட்சி புரிந்த தலம்.

விறன்மிண்ட நாயனார், செருத்துணை நாயனார், தண்டியடிகள் நாயனார், கழற்சிங்க நாயனார் ஆகியோர் முக்தி பெற்ற தலம்.

மாலையில் தியாகராஜப் பெருமானுக்கு நடைபெறும் சாயரட்சை பூஜை சிறப்பு.

Thiruvarur Cartபிரம்மோற்சவத்தின்போது திருவாரூரில் நடைபெறும் தேர்த் திருவிழா மிகவும் விஷேசம். இதை 'ஆழித்தேர்' என்று கூறுவர். 'திருவாரூர் தேரழகு' என்பது வழக்கு. தமிழ்நாட்டிலேயே பெரிய தேர் இது.

தில்லையில் வாழ்ந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி என்பது போல் திருவாரூரில் பிறந்தால் முக்தி என்பது வழக்கு.

அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.

திருஞானசம்பந்தர் ஆறு பதிகங்களும், திருநாவுக்கரசர் 21 பதிகங்களும், சுந்தரர் ஏழு பதிகங்களும் பாடியுள்ளனர். மாணிக்கவாசகர் தமது திருவாசகத்தில் இத்தலத்தைப் பாடியுள்ளார்.

இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com